எகிப்து நாட்டின் கெய்ரோ நகரை சேர்ந்த பெண் எமான் (வயது 36). இவருக்கு 11 வயது இருந்தபோது பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை நாளுக்கு நாள் பெருகி, தற்போது 500 கிலோ எடையுடன் காட்சி அளிக்கிறார். உலகிலேயே குண்டான பெண்ணாகவும் கருதப்படுகிறார். அதிகரித்துக்கொண்டே செல்லும் உடல் பருமனால் அவர் மிகவும் அவதி அடைந்து வருகிறார்.
இதையடுத்து, உலகின் அனைத்து நாடுகளாலும் கைவிடப்பட்ட நிலையில், எமானுக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால் என்பவர் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள முன்வந்தார். வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம் எமானின் நிலை குறித்து டாக்டர் எடுத்துக்கூறி, அவருக்கு விசா கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் எமானை இந்தியா அழைத்து வருவதற்கு எகிப்தில் இருந்து நேரடி விமானங்கள் கிடையாது. அரை டன் எடை கொண்ட அவரை ஏற்றிவர தனியார் விமான நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன.
இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வருவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எமான் அகமதுக்கு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கிடையே எமான் அகமதுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரூ.2 கோடி செலவில் கிர்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி பிரத்யேக அறையை உருவாக்கி வருகிறது. 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அறை ஆஸ்பத்திரியின் தரை தளத்தில் கட்டப்படுகிறது.
இதில் டாக்டர்கள் அறை, கண்காணிப்பாளர் அறை, 2 கழிவறைகள், வீடியோ கான்பரன்சிங் அறை ஆகியவை இடம் பெறுகின்றன. மேலும் குண்டுபெண்ணை கொண்டு செல்லும் வகையில் அறையின் வாசல் மிகப்பெரியதாக அமைக்கப்படுகிறது.