வெளிநாட்டிலுள்ள தாயார் அனுப்பிய பணம் எமனான சோகம்! ஒரு நேரடி ரிப்போர்ட் (வீடியோ, படங்கள்)

வவுனியா தேக்கவத்தையில் வசித்து வந்த குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் (25) நேற்றுமுன்தினம் (11) தனியாக வீட்டிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலை தொடர்பாக பலர் பலதகவல்களை வெளியிட்டிருந்தபோதும் எமது செய்தித்தளத்திற்காக விசேட செய்தியாளர் நேரடியாக தகவல்களை சேகரித்தபோது கருத்துத் தெரிவித்த உறவினர்கள்,

பாலநிசாந்தன், திருமணமாகி இரண்டு வயது ஆண் குழந்தைக்கு தந்தை என்பதுடன், மனைவியுடன் ஏற்பட்ட குடம்பத்தகராறு காரணமாக சில மாதங்கள் பிரிந்திருந்த நிலையில் தனது பாட்டியின் எதிர் வீட்டிலேயே வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

சிறுவயதிலேயே தாயார் வெளிநாடு சென்றதனால் சிறிய தாயின் அரவணைப்பில் வளர்ந்த நிசாந்தனிடம் கோபமும் பிடிவாதமும் அதிகமாகவே காணப்பட்டது.

பெரியவனானதும் மேசன் வேலைக்குச் செல்லும் நிசாந்தன் நண்பர்களுடன் குடிப்பதும் அரட்டை அடிப்பதும் என்ற நிலையில் வெளிநாட்டிலுள்ள தாயார் நிசாந்தனை தன்னுடன் வைத்துக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டுக்கு எடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை என்பதுடன் நிசாந்தன் அதில் ஆர்வம் காட்டவில்லையென்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலுள்ள தாயார் அடிக்கடி நிசாந்தனுக்கு செலவுக்கு பணம் அனுப்பி வருவதாகவும் தெரியவருகிறது.

அந்த வகையில் வழமையோல் வேலைக்கு செல்லும் நிசாந்தன் ஊருக்கே அறிமுகமில்லாத நடுத்தரவயதுடைய ஒருவருடன் கடந்த மூன்று நாட்களாக பழகிவந்துள்ளார்.

நிசாந்தன் கொல்லப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் 75 ஆயிரம் ரூபா பணம் நிசாந்தனின் தாயாரினால் நிசாந்தனுக்கு அனுப்பப்ட்டிருந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு சம்பவ தினத்தன்று (11) பி.ப. 1.30 மணிக்கு நிறை போதையில் தள்ளாடியபடி அந்த புது மர்ம நபருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நிசாந்தனை படுகொலை செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் நிசாந்தனை கைத்தாங்கலாக அழைத்து வந்து வீட்டினுள் படுக்க வைத்திருந்தார்.

அதன் பின் நிசாந்தனை சாப்பிட அழைத்தபோது நிசாந்தன் தூங்குவதாக மர்மநபரே பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அப்பெண் நிசாந்தனை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியதன் காரணமாக அவர்மேல் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்ததுடன் நிசாந்தனிடம் தாயார் அனுப்பிய பணம், அவருடைய பேர்ஸ் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியன காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட நிசாந்தனின் சகோதரன் கருத்து தெரிவிக்கையில் எனது சகோதரனின் மரணத்தில் மர்மம் உள்ளது இக்கொலையானது திட்டமிட்ட வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது பணத்துக்காக கொலை நடைபெற்றிருந்தாலும் இது ஒரு திட்டமிட்ட கொலை இக்கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் பொலிசாரிடம் தெரிவித்தள்ளேன்.

எனது சகோதரனின் கொலை ஏன் நடந்தது என்பதுடன் கொலைகாரனையும் பொலிசார் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நிசாந்தன் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்தததுடன் விசாரணைகளை மேற்கொண்ட பின் இன்று (13) விடுதலை செய்துள்ளனர்.

அத்துடன் நிசாந்தனை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் சந்தேகநபரைத்தேடி வலைவிரித்துள்ளதுடன் சந்தேகநபர் கண்டி பிரதேசத்திற்கு தப்பித்து சென்றிருப்பதாக தெரியவருகிறது.

படுகொலை செய்யப்பட்ட நிசாந்தனின் தாயார் இலங்கைக்கு வந்த பின்னரே இறுதிக் கிரிகைகள் மேற்கொள்ளப்படும் என உறவினர் தெரிவித்தனர்.