அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஜே.எம்.பஷீர் நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக அவரின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றுள்ளார். பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதையடுத்து தொண்டர்களை சந்திக்கும் முடிவில் சசிகலா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஜே.எம்.பஷீர் நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஜே.எம்.பஷீர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் ஆன பின் சசிகலாவால் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை ஆகும்.