தென் சீனக் கடல் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு: ஒபாமா நிர்வாகம் அழைப்பு

தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. மேலும் விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.

இதனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக, அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், தென் சீனக் கடல் தொடர்பாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண ஒபாமா அரசின் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. வருகிறது ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்க உள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறுகையில், அச்சுறுத்தல் அல்லது வற்புறுத்தல் வழியில் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கான வழிகளை கண்டறிய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

முன்னதாக, சர்ச்சக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை நேற்று வெளியிட்டது.

இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் பொறுட்டு 5 ஆண்டு திட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து இருந்தது.