இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம்: லயன் ஆருடம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடக்கிறது.

இந்திய தொடரில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 63 போட்டிகளில் 228 விக்கெட்டுக்கள் வீழ்த்திய லயன் இந்திய தொடர் குறித்து கூறுகையில் ஆஸ்திரேலியா படுமோசமாக விளையாடலாம் என்கிறார்.

மேலும் இந்திய தொடர் குறித்து லயன் கூறுகையில் ‘‘சமீபகால வரலாறு எங்களுக்கு என்ன சொல்கிறது என்றால், இந்தியா தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 49 டெஸ்டில் நான்கில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

உடலளவிலும் மனதளவிலும் பரிசோதிக்கும் தொடராக இருக்கப்போகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மைக்ரோஸ்கோப் வைத்து பார்ப்பதுபோல் பார்த்து அதன்மீது நம்முடைய விளையாட்டுத் திறனை செலுத்த வேண்டும். நாம் இந்திய மண்ணில் என்ன செய்ய விரும்புகிறோமோ அதற்கேற்றாற்போல் உலகக்தரம் வாய்ந்த அணியை அறிவிக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி இந்திய தொடரில் மிகவும் மோசமான ரன்கள் சேர்க்கலாம். அதேபோல் விக்கெட்டுக்களை வீழ்த்தவும் சிரமப்படலாம். இந்திய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று கேப்டன் ஸ்மித் பேசியுள்ளார்.

சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவகையில் ஆடும்களம் இருக்கப்போகிறது. இதில் அவர்கள் நன்றாக விளையாடக்கூடியவர்கள். அதனால் நாம் பொறுமை இழக்காமல் தொடர்ச்சியாக சரியான திசையை நோக்கி பந்து வீச வேண்டும். இந்தியாவில் டெஸ்ட் போட்டி முதலில் மெதுவாகச் செல்லும். அதன்பின் அவர்கள் விரைவாக விளையாடி ரன் சேர்த்துவிடுவார்கள். இதுதான் அங்குள்ள நிலை. ஒரு நாள் முழுவதும் விளையாடப்போகும் விளையாட்டின் மிகப்பெரிய தருணமான இதை வெற்றிகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நமது அணியில் இடம்பிடித்துள்ள பெரும்பாலானோர் இந்திய மண்ணில் விளையாடியது கிடையாது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர், வடே மற்றும் நான் ஆகிய நான்கு பேர்தான் 2013 தொடரில் விளையாடிய அணியில் உள்ளவர்கள். 7 பேர் இலங்கை தொடரில் விளையாடியவர்கள். இவர்கள் அனைவரும் இலங்கைக்கு சமமான சூழ்நிலையான இந்தியாவில் விளையாட இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வகையில் அவர்கள் இயல்பாக விளையாடினால் கிரிக்கெட்டின் உச்சத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.