ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை தடுப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரை ஒன்றின் முதல் பக்க செய்தியை அடிப்படையாக கொண்டு காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கவுள்ளதாக அறிவித்ததனை தொடர்ந்து பத்திரிகை ஒன்றின் முதல் பக்கத்தில் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நாட்டில் பெடரல் முறையை ஏற்படுத்துவதற்கான வாக்குறுதிக்கமையவே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முறையில் ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துவது குறித்து வருத்தமளிக்கின்றது. செய்தி ஒன்று வெளியிடும் போது நாட்டை நல் வழிப்படுத்தும் வகையில் காணப்பட வேண்டும்.
சமூகத்திற்கு உண்மையை வழங்க வேண்டும். எனினும் அந்த சலுகை கிடைத்தவுடன் அரசாங்கத்திற்கு கிடைக்கும் கௌரவத்தை தடுப்பதற்காக இவ்வாறு பத்திரிகையின் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்படும் அளவில் ஊடகங்களின் நிலை காணப்படுகின்றது.
உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவுமிக்க நாடாக இலங்கையை உலகத்தின் முன் கொண்டு செல்வதே நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.