தனது ட்வீட்டுக்கு பதில் அளித்த பீட்டாவுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் எழுந்து வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்புக்கு எதிராகவும் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், சிம்பு, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் பீட்டா அமைப்புக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இதுவெல்லாம் பீட்டா அமைப்பின் கண்ணுக்கு தெரியாதே என்று கூறியிருந்தார்.

இதை பார்த்த பீட்டா இந்தியா அமைப்பு குஷ்புவுக்கு பதிலளிக்கும்விதமாக ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தது. காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஒரு வீடியோ லிங்கை குஷ்புவுக்கு அனுப்பி, காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. இதனால்தான் இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்டவிரோதமானது என்று பதில் அனுப்பியுள்ளது.

இதற்கு குஷ்புவும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டை உங்களால் வேறு எங்காவது தடை செய்ய முடிந்ததா? மடகாஸ்கர் அரசிடம் அவர்களுடைய ரூபாய் நோட்டில் இருக்கும் சின்னத்தை நீக்க பேச முடிந்ததா? என்பதை தயவு செய்து கூறுங்கள். ஜல்லிக்கட்டால் நன்மைகள் பல உண்டு.

ஒரு காளையை எப்படி கவனித்துக் கொள்கிறார்கள், ஒரு விவசாயி காளை அல்லது பசுவை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதை நிரூபிக்க நான் லட்சக்கணக்கில் வீடியோக்களை காண்பிக்க முடியும். ஜல்லிக்கட்டில் நீங்கள் 5 தவறுகளை பார்த்தால் நாங்கள் ஏன் அதை ஆதரிக்கிறோம் என்பதற்கு 50 ஆயிரம் சரியானவற்றை காண்பிக்கமுடியும். விதிமுறைகளை கொண்டு வந்தால் நாங்கள் மதிப்போம். ஆனால் தடையை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு பீட்டா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.