இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்து வருகின்றன. இதனால் 34 வயதான பிறகும் மார்க்கெட்டில் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
“நான் சொந்த காலில் சுதந்திரமாக இருக்கிறேன். எதற்கும் பயப்பட மாட்டேன். ஆண்கள் உள்பட யாராலும் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்று எடுப்பதை தவிர்த்து, வேறு எதற்கும் எனக்கு ஒரு ஆண் துணை தேவை இல்லை. எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
அதற்காக ஒரு ஆணை நிச்சயம் தேர்ந்தெடுப்பேன். ஆனால் அந்த ஒருவர் கூட என்னைப் போலவே யோசிப்பவராகவும் என்னை உண்மையாக விரும்புபவராகவும் இருக்க வேண்டும். நம்பிக்கையானவராகவும் இருக்க வேண்டும். எனக்கு அவர் துரோகம் செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். அந்த வாழ்க்கைத் துணைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்.
திருமண வாழ்க்கையில் நம்பிக்கை என்பது முக்கியமானது. நம்பிக்கை துரோகத்தை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது. சினிமாவில் வெற்றி-தோல்வி பற்றி நான் கவலைப்படுவது இல்லை. தோல்வியை பார்த்து துவண்டு போக மாட்டேன். எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்கிறேன். பலனை பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்வது இல்லை.
அதிர்ஷ்டவசமாக என்னை சுற்றிலும் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு மற்றவர்கள் தரும் உற்சாகம் என்பது பெரிய பலம். எனது நண்பர்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது எனக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.”
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.