படப்பிடிப்பில் விபத்து: பிரியங்கா சோப்ராவுக்கு காயம்!!

அமெரிக்க தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘குவான்ட்டிக்கோ’ தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா ‘ஆக்‌ஷன் நாயகி’யாக அசத்தி வருகிறார். இந்த தொடருக்காக கடந்த வியாழக்கிழமை மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, சண்டைக் காட்சியில் பாய்ந்த பிரியங்கா சோப்ரா, எதிர்பாராத விதமாக தலைகீழாக கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் உடனடியாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

டாக்டர்கள் அறிவுரையின்படி, இரண்டு நாட்கள் பூரண ஓய்வுக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 74-வது  ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, சமீபத்தில்தான் மும்பை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.