உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் விராட் கோலி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் 105 பந்தில் 122 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.
177-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு இது 27-வது சதமாகும். அதிகம் சதம் அடித்த வீரர்களில் தெண்டுல்கர் (49 சதம்), பாண்டிங் (30), ஜெயசூர்யா (28) ஆகியோருக்கு அடுத்தப்படியாக அவர் தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளார்.
2-வது இன்னிங்சில் அதாவது ரன் சேசிங்கில் கோலி 17-வது செஞ்சூரியை (96 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் தெண்டுல்கரை சமன் செய்தார். தெண்டுல்கர் 232 ஆட்டத்தில் 17 சதமும், தில்சான் 116 இன்னிங்சில் 11 சதமும், கிறிஸ்கெய்ல் 139 இன்னிங்சில் 11 சதமும் 2-வதாக விளையாடி எடுத்தனர்.
வெற்றிகரமாக ரன்னை சேஸ் செய்ததில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார். வெற்றிகரமாக ரன் இலக்கை எடுத்ததில் அவரது 15-வது சதமாகும். (63 ஆட்டம்). இதன் மூலம் தெண்டுல்கரை (14 சதம்) அவர் முந்தி இந்த சாதனையை படைத்தார்.
2-வது இன்னிங்சில் கோலி அடித்த சதத்தில் இரண்டு செஞ்சூரியில் மட்டும் தான் இந்தியா வெற்றி பெறவில்லை.
தில்சான், ஜெயசூர்யா, சயீத் அன்வர் ஆகியோர் வெற்றிகரமாக ரன்னை சேஸ் செய்ததில் தலா 9 சதம் அடித்து இருந்தனர்.