இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்ரவரி 23-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கான 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை கருத்தில் கொண்டு நாதன் லயன், ஆஷ்டன் அகர், ஸ்டீவ் ஓ கீபே, மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ‘லெக்’ ஸ்பின்னரான 23 வயதான மிட்செல் ஸ்வெப்சன் புதுமுகம் ஆவார்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஜாக்சன் பேர்டு, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஓ கீபே, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட்.