இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவின் அபாரமான சதத்தால் இந்தியா 351 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன் குவித்தது. ஜோரூட் 78 ரன்னும், ஜேசன்ராய் 73 ரன்னும், ஸ்டோக்ஸ் 40 பந்தில் 62 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். பாண்டியா, பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இந்தியா 48.1 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்தது. 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது. விராட் கோலி 105 பந்தில் 122 ரன்னும் (8 பவுண்டரி, 5 சிக்சர்), கேதர் ஜாதவ் 76 பந்தில் 120 ரன்னும் (12 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 63 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. 5-வது விக்கெட்டான கோலி- கேதர் ஜாதவ் ஜோடி நம்ப முடியாத வகையில் அபாரமாக ஆடி 200 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற வைத்தது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
நாங்கள் ஒரு கட்டத்தில் 63 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து இருந்தோம். அதில் இருந்து மீண்டுதான் 351 ரன் இலக்கை எடுத்து இந்த வெற்றியை பெற்று உள்ளோம்.
மூழ்கிய நிலையில் இந்த வெற்றி கிடைத்தது மிகவும் அபாரமானது. இதற்கு சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’தான் காரணம். நானும், கேதர் ஜாதவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஹர்த்திக் பாண்டியா கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்து வைத்தார்.
கேதர் ஜாதவின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அபாரமாக இருந்தது. நான் பார்த்த சிறந்த ஆட்டம் இதுவாகும். அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
350 ரன் குவித்தும் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் கூறும்போது, இந்திய அணியின் 4 விக்கெட்டை எளிதில் கைப்பற்றிய நிலையில் கேதர் ஜாதவ் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டார்.
அவர் எந்த வகையிலும் எங்களுக்கு வாய்ப்பை கொடுக்க விடாமல் செய்து விட்டார். அவரது ஆட்டம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். எங்களது வெற்றியை அவர் பறித்து விட்டார் என்றார்.
இந்த வெற்றி மூலம் 3 ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் வருகிற 19-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.