கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

கேரள மாநிலத்தில் தியேட்டரில் வசூலாகும் வருமானத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு புதுப்படங்கள் வெளியாகாமல் முடங்கின.

இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் “கேரள அரசு இந்த பிரச்சினையை தீர்க்க சரியான நிலைப்பாட்டை எடுத்து வரும்போது தன்னிச்சையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சரியல்ல. முதலில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வர வேண்டும்” என கூறி இருந்தார்.

முதல்-மந்திரியின் வேண்டுகோளை தொடர்ந்து ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் கூறுகையில் “இந்த பிரச்சினையை தீர்க்க முதல்-மந்திரி உறுதி அளித்துள்ளதால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம்” என்றார்.