”காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா?” கேரள முதல் மந்திரி ஆவேசம்!

மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் கமிஷனின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சமயத்தில் காலண்டர்கள், டைரிகள் வெளியிடப்பட்டு வருகிறது.
வழக்கமாக காதி கிராமத் தொழில் கமி‌ஷனின் காலண்டர்களில் மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெறும். இந்த ஆண்டு காலண்டர்களில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது
இதற்கு அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில், இது குறித்து கருத்து கூறியுள்ளார்.
அப்பக்கத்தில் “ சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லாத, காந்தியைப் போல சிக்கனமாக இல்லாத ஒருவர் காந்திக்குப் பதிலாக இடம் பெறுவதா?, இது மோடியை நல்லவராக சித்தரிக்கும் நடவடிக்கை. காந்தி ராட்டையில் நூல் நூற்கும் படம் ஒவ்வொரு மக்களின் இதயத்திலும் உள்ளது.
மத்திய அரசின் எல்லா நடவடிக்கையும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை ஒத்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் நாட்டில் நிலவும் மதச்சார்பின்மையை உடைக்க சதி செய்து வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கருத்து கூறியவர்களை மாநில பா.ஜ.க தலைவர்கள் மிரட்டும் தொனியில் பேசுகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.