பொருளாதாரப் போட்டியில் தொடங்கி அணு ஆயுதப் போட்டி வரை இடைப்பட்ட பல்வேறு துறைகளில் ரஷியாவை விழுங்கி ஏப்பம்விட அமெரிக்காவும், அமெரிக்காவை தவிடுப்பொடியாக்க ரஷியாவும் காலகாலமாக முயன்று வருகின்றன.
இதன் அடிப்படையில் அமெரிக்காவின் நட்பு நாடுகளை ரஷியாவும், ரஷியாவின் நேச நாடுகளை அமெரிக்காவும் பரம விரோதிகளாக பாவித்து வருகின்றன.
சமீபத்தில், சிரியா மற்றும் உக்ரைன் உள்நாட்டுப் போரில் ரஷியாவின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது நினைவிருக்கலாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த ஐந்தாண்டுகளில் ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷியா விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது:-
அமெரிக்காவின் தடைகளால் ரஷியா மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகிறது. பல்வேறு தடைகளுக்கு உள்ளாகியுள்ள ரஷியா விவகாரத்தில் சில நல்ல மாற்றங்களை செய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டியுள்ளது. அப்படி ஏதாவது நடந்தால் இதன் மூலம் ஏராளமான மக்களுக்கு நன்மை ஏற்படும் என நான் கருதுகிறேன்.
இந்த முயற்சியின் ஒருகட்டமாக தங்களது அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டு, அணு ஆயுத பலத்தையும் படிப்படியாக ரஷியா குறைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிரம்ப்பின் பேட்டி இன்றைய நாளிதழில் வெளியானதும், அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் தலைவர் ஜான் பிரெனான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவைப் பற்றியும் அந்நாட்டின் நோக்கம், செயல்பாடு மற்றும் முழு ஆயுத பலம் போன்றவற்றைப் பற்றியும் டொனால்ட் டிரம்ப்பால் இன்னும் முழுமையாக மதிப்பிட முடியவில்லை என்பதையே அவரது கருத்து சுட்டிக் காட்டுகிறது என ஜான் பிரெனான் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, ஒபாமாவை விட ஆற்றல் மிக்க அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருப்பார் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து வெளியிட்டிருந்தார். இதேபோல், ஒபாமாவை விட ஆற்றல் மிக்க நிர்வாகியாக புதினை கருதுவதாக டொனால்ட் டிரம்ப்பும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், குடியரசு கட்சி வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனாட் டிரம்ப் வெற்றிபெற விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் ரஷிய நாட்டின் உளவுத்துறை இணையதள ஊடுருவலில் ஈடுபட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, நினைத்ததை சாதித்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஆமோதிக்கும் வகையிலும் ரஷியாவுடன் இதுவரை கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை நிரூபிக்கும் வகையிலும் டொனல்ட் டிரம்ப்பின் இந்த புதிய பேட்டி அமைந்துள்ளதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க மக்கள் கருதுகின்றனர்.