எதிரிகளை துவம்சம் செய்வதே பைரவர் வேலை!

நம்மை வழிநடத்தும் பரம்பொருள் ஒன்றுதான். பரம் பொருளை நாம், நம் மனநிலைக்கு ஏற்ப இறைவனின் பல வடிவங்களாக வழிபடுகிறோம். அந்த வகையில் எல்லா வடிவங்களும் ஈசனின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.

அதன்படி பைரவர் வடிவமும் அதில் ஒன்று நாட்டில் ஆணவத்தால் ஏற்படும் அதர்மத்தை அழித்து சத்தியத்தை நிலைநாட்டி தர்மத்தை காக்கும் வடிவமாக பைரவ வடிவம் கருதப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எதிரிகளை துவம்சம் செய்வதே பைரவர் வேலையாகும்.

எனவே பைரவரை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபாடு செய்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்வில் ஜெயம் உண்டாகும். ஆகையால் தான் “பைரவமே சுவாசம்” என்றும் சொல்லப்படுகிறது.

காவல் தெய்வமான பைரவர் வழிபாடு ஆதிகாலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இடையில் பல்வேறு காரணங்களால் பைரவ வழிபாடு மங்கியது.
ஆனால் தற்போது மீண்டும் பைரவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பைரவரை மக்கள் தேடி, நாடிச் சென்று வழிபட்டு அவர் அருள் பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக பைரவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை பக்தர்கள் தெரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பைரவ வழிபாட்டை தொடங்குவதற்கு மிக ஏற்ற நாளாகும்.

பைரவர் வழிபாடு பற்றி எல்லா புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. அவற்றைத் தெரிந்து கொண்டு வழிபாடு செய்வது உரிய நேரத்தில், உரிய பலன்களைத் துல்லியமாகப் பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கும்.

குறிப்பாக பவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத எல்லாவித தொல்லைகளையும் நாம் தீர்த்துக் கொள்ள முடியும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

பைரவர் வழிபாட்டை செய்வதன் மூலம் எல்லாவித செல்வங்களையும் பெற முடியும்.