பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏழு பேரை மட்டும் அழைத்துக் கொண்டு உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் உலகின் முதனிலை வர்த்தகர்கள் ஒன்று கூடுவார்கள்.
இந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காக பிரதமர் ஏழு பேரைக் கொண்ட குழுவொன்றுடன் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளார்.
எவ்வித நலனும் இல்லாத வெளிநாட்டு விஜயங்களின் போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 80-90 பேரை அழைத்துக் கொண்டு செல்வார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிக முக்கியமான ஆவணங்கள் பலவற்றை எடுத்துச் சென்று உதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க உள்ளார்.
இலங்கைப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஓர் நிலையை எட்டுவதற்கு இந்த விஜயம் வழியமைக்கும்.
இந்த விஜயத்தின் ஊடாக நாட்டுக்கு பல்வேறு பொருளாதார வெற்றிகள் கிடைக்கப்பெறும்.
அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா மற்றும் மேலும் மூன்று அதிகாரிகள் மட்டுமே இந்த விஜயத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.