சர்வதேச குற்றவாளிகளின் சொர்க்கபுரியாக மாறக்கூடிய அபாயத்தில் இலங்கை!

சர்வதேச குற்றவாளிகள், கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாறக்கூடிய அபாயத்தில் இலங்கை காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மூன்று லட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட வீசா வழங்க நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்மானித்துள்ளார். இந்த தீர்மானம் ஆபத்தானது ஒர் தீர்மானமாகவே கருதப்பட வேண்டும்.

இவ்வாறு வதிவிட வீசா வழங்கினால், சர்வதேச கடத்தல்காரர்கள் குற்றவாளிகளின் கேந்திர மையமாக இலங்கை மாற்றமடையும்.

அரசாங்கத்தின் டொலர் பசியை தீர்த்துக் கொள்ள எந்தவொரு பாவ காரியத்தையும் செய்ய முயற்சிக்கின்றது.

இந்த பணத் தொகையைக் கொண்டு கொழும்பில் மூன்று பேர்சஸ் காணியேனும் கொள்வனவு செய்ய முடியாது.

இவ்வளவு சிறிய தொகை முதலீட்டுக்கு பல ஆண்டுகள் நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கினால் குற்றவாளிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்வர்.

எனவே, கூட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் நிதி அமைச்சரின் இந்த தீர்மானத்தை எதிர்க்கின்றோம் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.