அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 14 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளர்.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவை ஏற்க இளைஞர்கள் மறுப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தடையால் அலங்காநல்லூரில் 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அலங்காநல்லூரியில் கோயில் காளைகளுக்கு பூஜைகள் மட்டும் நடத்த காவல்துறை அனுமதித்தனர்.
இருந்தபோதும் வாடிவாசல் வழியே கோயில்களை அழைத்து செல்ல அப்பகுதி மக்கள் முயற்சித்தனர். ஆனால் காவல்துறை அனுமதிக்கவில்லை.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் வெளிமாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர். இவர்களுடன் அலங்காநல்லூர் பொதுமக்களும் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 14 மணிநேரத்திற்கும் மேலாக வாடிவாசல் அருகே ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் போராடி வருகின்றனர். இவர்களை வெளியேற காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் கூட இளைஞர்கள் கலைந்து செல்லவில்லை.
போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் மற்றும் எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகியோர் அலங்காநல்லூரில் முகாமிட்டுள்ளனர்.
அப்போது வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்ரன், உங்களுக்கான போராட்ட அனுமதி நேரம் மாலை 5 மணிவரைதான். ஆகையால் போராட்டத்தை கைவிட வேண்டும் என ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் அலங்காநல்லூர் விழா குழுவினரும் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால் இதை ஏற்க இளைஞர்கள் மறுத்து வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் பெண்களும் இணைந்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. தற்போது அங்கேயே உணவு சமைத்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.