தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு தமிழக பாஜகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக உறுப்பினரான அமர் பிரசாத் ரெட்டி என்பவர் நடிகர் ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 5ம் திகதி எழுதப்பட்ட அந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து மக்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும், அதனால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், இந்தியாவை வல்லரசாக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கை நிறைவேற்ற பாஜகவில் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களது வெளிப்படையான நிர்வாகம் மற்றும் தலைமை பண்புகள் காரணமாக தமிழகம் முதல் மாநிலமாக திகழும் என்றும் அந்த கடிதத்தில் ரஜினிகாந்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என நீங்கள் பலமுறை சொல்லியுள்ளீர்கள். உங்களது விருப்பத்தை பகவத் கீதையின் இந்த வார்த்தைகள் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டன.
“யதா யதா ஹி தர்மஸ்ய த்லாநீர்பவதி பாரத அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதுநாம் விநாஷாய ச்ச துஷ்க்ருதாம் தர்மஸ்ம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே”
தமிழகத்தை காக்கவும், தமிழக மக்களை காக்கவும் எனது இந்த வார்த்தைகளை கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.