அரசின் கையாலாகாத்தனத்தை இளைஞர்கள் நம்பவில்லை: சீமான் சீற்றம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத்தனத்தை இளைஞர்கள் நம்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழ் மக்க்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டி இளைஞர்களும் பொதுமக்களும் திங்கட்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டம் இரவிலும் விடிய விடிய தொடர்கிறது.

கடும்குளிரிலும் பெண்கள் உட்பட அனைவரும் விடியவிடிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இளைஞர்கள் அனைவரும் தங்கள் உரிமையைப் பாதுகாக்க தன்னெழுச்சியுடன் போராட்டத்திற்குத் திரண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் கையலாகாத்தனத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அதிமுக பேச்சாளரான சி.ஆர்.சரஸ்வதி, சட்டத்தையும் மக்கள் உணர்வையும் மதிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் அதிமுக அரசு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தமிழர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் எனவும் போட்டிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.