வாழ்த்து சொல்லாத சசிகலா: பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அணி?

முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவரை வாழ்த்து பேசிய விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி பன்னீர் செல்வம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சசிகலா மாலை வரை பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் இருந்தார்.

பிரதமர் மோடி, கவர்னர் வித்யாசாகர் ராவ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்த தகவல் வெளியான பிறகுதான் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொங்கல் தினத்தில் பிறக்கும் பெருமை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதிலும் பொங்கல் பிறந்த நாளில் பிறந்து முதல்வராகும் பெருமை பன்னீர்செல்வத்துக்கு கிடைத்துள்ளது.

நம் பிறந்த நாளை நாம்தான் கொண்டாடுவோம். ஆனால் பன்னீர்செல்வம் பிறந்த நாளை உலகம் எங்கும் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். ஜெயலலிதா வழியில் பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகம் செல்கிறது என்று, அவரை புகழ்ந்து பேசினார்.

இப்படி ஒருவரை வாழ்த்தி பேசுவது என்பது அதிமுவில் புதிய கலாசாரமாக அமைந்தது.

பன்னீர்செல்வம் தனியாக செயல்பட்டு வரும்நிலையில் பண்ருட்டியின் பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பன்னீர்செல்வம் அணியில் அவர் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில்இருந்தவரும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து, சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டவருமான கே.பி.முனுசாமி, சசிகலாவுக்கு எதிராகவும், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் பேட்டியளித்துள்ளார்.

திவாகரன் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் கட்சிக்குள் இல்லாதபோது, தேவையில்லாமல் பேசி வருகிறார்கள் என்றும் அவர்கள் இவ்வாறு பேசுவதி அதிமுக பொதுச்செயலாளர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இவரும் களம் இறங்கியுள்ளதால், அதிமுகவிற்குள் சசிகலாவிற்கு எதிராக புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.