சேவல் சண்டையை மையப்படுத்தி வெற்றிமாறன் ‘ஆடுகளம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் ஜல்லிக்கட்டு பிரச்சினையை மையமாக வைத்து ஏதாவது படம் எடுக்க வாய்ப்பிருக்கிறதா? என்று இயக்குனர் வெற்றிமாறனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியமான நிகழ்வு. இதை விதிமுறைகளுடன் நடத்தவேண்டும் என்பது எனது கருத்து. ஜல்லிக்கட்டு தடைக்கு மிருக வதை என்பதுதான் காரணம் என்று சொல்கிறார்கள். இது ஏற்புடையதாக இல்லை. உண்மையிலேயே, மிருக வதைக்கு தடை செய்வதென்றால் தீபாவளிக்கு வெடிக்கின்ற பட்டாசையும், விநாயகர் சதுர்த்திக்கு கடலில் கரைக்ககூடிய சிலைகளையும்தான் நாம் முதலில் தடை செய்யவேண்டும்.
நான் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடி வாசல்’ என்ற நாவலின் உரிமையை வாங்கி வைத்துள்ளேன். சீக்கிரமாகவே ஜல்லிக்கட்டு பற்றிய ஒரு படத்தை எடுப்பேன் என்று கூறினார். இயக்குனர் அமீரும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி ‘சந்தனத்தேவன்’ என்ற படத்தை தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.