ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்ததால் ஜி.வி.பிரகாஷ் உண்ணாவிரதம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி, கூளமேடு ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு நேற்று தடையை மீறி இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி, குட்டிக்கரடு என்ற இடத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டன. இதற்காக நேற்று இரவோடு இரவாக அந்த பகுதியில் உள்ள மைதானம் சமன் செய்யப்பட்டு காளைகளும் கொண்டுவரப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டுக்கு நடிகரும், இசை அமைப் பாளருமான ஜி.வி. பிரகாஷ் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, டி.எஸ்.பிக்.கள் பொன். கார்த்திக்குமார், பாஸ்கர் மற்றும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக கொண்டுவரப்பட்ட காளைகளை மீட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறினார்கள்.

இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடல் ஆசிரியர் அருண்ராஜா காமராஜ் மற்றும் டைரக்டர் சண்முகம், உதவி இயக்குனர் கவுசிகபாண்டியன் ஆகியோர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2 மணி நேரம் கழித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனாலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நாட்டு மாடுகளை காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், இளைஞர்களின் போராட்டத்தை உச்சநீதிமன்றம் மதித்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், இதற்காக மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீடீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது.

ஜல்லிக்கட்டு தமிழ் மொழியின் அடையாளம், தமிழ்நாட்டின் கலாச்சாரம். பீட்டா போன்ற அமைப்பினரால் ஜல்லிகட்டை தடை செய்ய முடியாது. எனவே பீட்டா போன்ற அமைப்பினை தடை செய்ய வேண்டும். இதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளது. பிரேசில் உள்பட பல வெளிநாடுகளில் நம்நாட்டு மாடுகள் இருந்து வருகிறது. ஆனால் இங்கு அழிந்து வருகிறது. அதனை காக்க வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் ஜி.வி. பிரகாஷ் அளித்த பதில் விவரம் வருமாறு:-

கேள்வி:-பீட்டா அமைப்பில் நடிகர், நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனரா?

பதில்:- அவர்கள் அறியாமையில் உள்ளனர். அதில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும். வெளிநாட்டு குளிர்பானங்கள், உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தன்னாலே அவர்கள் ஓடிவிடுவார்கள். நான், தமிழ் மக்களின் நலனுக்காக போராடும் இளைஞர்களில் ஒருவனாக போராடி வருகிறேன்.

கே:-ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திரை உலகினரை திரட்ட நீங்கள் முயற்சி செய்தீர்களா?

ப:- தமிழ் உணர்வு உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.