கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மிக் விமான ஒப்பந்தம் தொடர்பில் தகவல் வெளியிட்டால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்களை, அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மிக் விமான ஒப்பந்தம் தொடர்பில் தகவல் வெளியிட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என லசந்த விக்ரமதுங்க அச்சத்தில் இருந்ததாக லசந்தவின் குடும்பத்தினர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் குறிப்பிட்டுள்ளதாக நேற்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 20ஆம் திகதிக்கு இந்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மேற்கொள்ளப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை லசந்த வெளியிட்டிருந்தார்.
2016ஆம் ஆண்டில் ஒரு மிக் விமானம் 2.462 மில்லியன் டொலர் என்ற கணக்கில், நான்கு மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
அரசாங்கம் சார்பாக இலங்கை விமானப்படை உக்ரைய்ன் நிறுவனம் ஒன்றுடன் இந்த 4 மிக் -27 விமானத்திற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து வெளியேறிய சமகால வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகிய இரண்டு அமைச்சர்களும், இந்த ஒப்பந்தத்தில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.