நவக்கிரகங்களில் சுபக் கிரகமாக வர்ணிக்கப்படுபவர் குரு. இவரை ‘பிரகஸ்பதி’ என்றும் அழைப்பார்கள். பிரகஸ்பதி என்பதற்கு பெரிய பொருளை உணர்ந்தவர் என்று அர்த்தம். பிரம்மம் என்பதே பெரிய பொருள். இந்த பிரகஸ்பதி, தேவர்களின் குருவாக இருக்கிறார். ஆங்கீரஸ முனிவருக்கும், சித்ரா தேவிக்கும் பிறந்த குரு பகவான், நன்மை அளிக்கும் கிரகங்களில் முதன்மையானவர்.
எனவேதான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறு கிறார்கள். இவர் தன்னுடைய ஒரு கரத்தில் வஜ்ராயுதத்தை தாங்கியுள்ளார். இவருக்கு உகந்த உலோகம் பொன். ரத்தினம் புஷ்பராகம். பஞ்ச பூதங்களில் இவர் ஆகாயமாக வர்ணிக்கப்படுகிறார். இவரது திசை வடகிழக்கு. தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு உரியவர். இவரது உச்ச வீடு கடகம். நீச வீடு மகரம். இவரது அதிதேவதை இந்திர மருத்துவன்.
குருவிற்கு தேவகுரு, சுநாசார்யர், வாசீகர், பீதாம்பரம், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிஞ்ஞர், நீதிகாரர், தாராபதி, கிரகபீடாபகாரர், சவும்யமூர்த்தி போன்ற பல பெயர்கள் உள்ளன. ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டது. அப்போது போரில் பல தேவர்கள் மாண்டனர். இறந்தவர்கள் சிறந்த மூலிகைகளின் மூலமாக, மீண்டும் உயிர்பெறச் செய்தார் பிரகஸ்பதி. எனவே குருவுக்கு ‘ஜீவன்’ என்ற பெயரும் உண்டு.
ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு செய்யும் பொழுது, குருவுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது சாலச்சிறந்தது.
குரு காயத்ரி மந்திரம் :
‘ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’
இடபக் கொடியை வைத்திருக்கும் குரு பகவானை அறிந்து கொள்வோம். அருட்கரங்களை கொண்ட அவர் மீது தியானங்களைச் செய்வோம். குருவாகிய அவர் தீமைகளை அகற்றி, நன்மைகளை வழங்கி காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். அஞ்ஞானம் அகலும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வறுமை நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். சேமிப்பு வளரும். உடல் வலிமையும், உள்ள வலிமையும் ஏற்படும். சாதனைகள் புரிய வாய்ப்புகள் அமையும்.