திருவள்ளூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாலங்காடு. இங்கு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தினசபை உள்ளது.
காரைக்கால் அம்மையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார். அப்போது சிவன் அவரை, ‘அம்மா..!’ என்றழைத்தார். பின்னர் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது, ‘பிறவாமை வேண்டும்.
பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்’ என்றார் காரைக்கால் அம்மையார். சிவபெருமான் அப்படியே அருள்செய்தார். அதன்பிறகு ஆலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், மூத்த திருப்பதிகம் பாடினார்.
இந்த நேரத்தில் மன்னன் ஒருவனின் கனவில் தோன்றிய சிவன், தனக்கு பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சன்னிதி எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதி எழுப்பினான். இதில் காரைக்கால் அம்மையார் ஐக்கியமானார். இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.