ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்ட முறையில் முயற்சி செய்கிறேன் : விஷால் பேச்சு!

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி நடிகர் சங்கத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:-

தமிழகமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறது. எங்களுக்கு இந்த ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து முகவரியும் கொடுத்து மிக பிரமாண்டமாக வழி அமைத்து கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய பிறந்த நாளை இந்த வருடம் முழுவதும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அவரால் நாம் பெருமைபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசியதாவது:-

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மக்களுக்காக செய்த வி‌ஷயங்களை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்.

சமூக வலைதளங்களில் விஷால் ஜல்லிகட்டுக்கு எதிராக பேசினார், பீட்டாவை ஆதரிக்கிறார் என்று கூறிவருகிறார்கள். பீட்டாவை நான் ஆதரிக்கவில்லை. பீட்டாவுக்கு நான் விளம்பர தூதரும் இல்லை. இதை போன்று புரளியை பரப்புவது தவறான ஒன்றாகும்.

ஜல்லிகட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன். விஷால் ஜல்லிகட்டை ஆதரிக்கிறார் என்றால் அதை நான் நேரடியாக கூறினால் தான் அது உண்மையான ஒரு செய்தியாகும். சமூக தளங்களில் உள்ள யாரோ ஒருவர் கூறும் தவறான செய்தி உண்மையான ஒன்றாகாது.

இங்கே இளைஞர்கள் போராடுவது மத்தியில் உள்ள அரசுக்கு கேட்டிருக்கும். கண்டிப்பாக இனி ஜல்லிக்கட்டு முறையாக நடக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை நான் நடிகர் சங்க பொது செயலாளராக கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஜல்லிக்கட்டு நடக்க நான் தனிப்பட்ட முறையிலும் முயற்சி செய்து வருகிறேன்.

இவ்வாறு விஷால் பேசினார்.

நிகழ்ச்சியில் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சத்யராஜ், பிரபு, ஐசரி கணேஷ், குட்டி பத்மினி, ராஜேஷ், உதயா, மனோபாலா, லலிதகுமாரி, அஜய் ரத்னம், பிரேம், தளபதி தினேஷ், பிரகாஷ், காஜா மைதீன், வேலூர் வாசுதேவன், ஹேமச்சந்தி ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.