வடக்கு அரசியல்வாதிகளால் பாழாகும் அபிவிருத்தி!

அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பிச் செல்கிறது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

இன்று (17) வட்டக்கச்சியில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளால் வட மாகாணத்திற்கு வரும் பணம் செலவிடப்படாமல் திரும்பிச்செல்கின்றது.

குறிப்பாக இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தொகைப்பணம் வந்தது, அது ஒன்றும் செய்யப்படாமல் திருப்பியனுப்பப்பட்டது.

அது மட்டுமல்ல மாங்குளம் பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்கும் பணம் வந்தது அதுவும் ஒன்றும் செய்யப்படாமல் திரும்பிப் போனது எனத்தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

விதண்டாவாதங்களில் ஈடுபடாது, அனைவரும் சேர்ந்து மக்களுக்கு வேலை செய்ய வேண்டும். நான் இனவாத அரசியல் செய்யவில்லை. நாம் இன, மத, கட்சி வேறுபாடின்றி இணைந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல முடியும்.

நமது கடவுள் எல்லாம் தமிழ் சிங்கள வேறுபாடின்றி ஒன்றாக ஒற்றுமையாக இருக்கின்றனர்.

அரசியல் பிரமுகர்களும் தமிழ் சிங்கள வேறுபாடின்றி திருமணம் செய்து ஒன்றாக இருக்கின்ற நிலையில், நாம் மட்டும் சண்டைபிடிப்பதற்கான தேவை எதற்கு? நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்ப்பட வேண்டும்.

இராணுவத்தினர் கூட புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள்.

இப்பொழுதுள்ள இராணுவம் யுத்தத்துக்கானதல்ல; பொலிசாரும் அவ்வாறே. அனைவரும் மக்களுக்கானவர்கள் அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதுவே நல்லிணக்கம் எனத் தெரிவித்தார்.

அத்துடன் சிவில்ப்பாதுகாப்பு திணைகளத்தில் வேலைசெய்யும் தாய்மார்களது குழந்தைகளை பராமரிப்பதற்கான பராமரிப்பகத்தை அமைக்க தனது சொந்தப்பணத்திலிருந்து இரண்டு இலட்சம் தருவதாகவும் அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.