பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது கூட தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு கோடி பணங்களை அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர், என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்..
எம்.ஜி. ஆரின் நூறாவது பிறந்த தினக் கொண்டாட்டம் இன்று (17) காலை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியிலுள்ள எம்.ஜி. ஆரின் உருவச் சிலைக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
1965ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு விஜயம் செய்த எம்.ஜி.ஆர் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்து சென்றமை எங்கள் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.
1983ஆம் ஆண்டிலே இலங்கையில் மிகப் பெரிய இனப்படுகொலை இடம்பெற்ற போது இலட்சக் கணக்கில் எமது மக்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து அகதிகளாகச் சென்ற போது ஆதரித்து உதவி செய்தவரும் அவர்தான்.
அதேபோன்று எங்களுடைய விடுதலை இயக்கங்களுக்கு கோடி பணங்களை அள்ளி வழங்கி எங்களுடைய போராட்டங்களுக்கு உதவி செய்தவர். அவர் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது கூட விடுதலைப் போராட்டத்துக்காகத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குக் கோடி பணங்களை அள்ளிக் கொடுத்தவர்.
அமரர்- எம்.ஜி.ஆர் இலங்கையின் கண்டி நகரின் நாவலப்பிட்டியில் பிறந்து இந்தியாவின் தமிழகத்திற்குப் பெற்றோருடன் குடிபெயர்ந்து அங்கு நாடகங்களில், சினிமாவில் நடித்து ஒரு கொடை வள்ளலாக தன்னுடைய சொத்துக்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கியதன் விளைவாக மக்களின் செல்வாக்கை மிகப் பெருமளவில்பெற்றார்.
பின்னர் தனியொரு கட்சியை ஆரம்பித்து தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று தடவைகள் பதவியேற்றார். இறக்கும் வரை தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராகவே அவர் விளங்கினார்.
வெலிக்கடை வெஞ்சிறையில் வெட்டி விழுத்தப்பட்ட தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருக்கு, அவர்களுடைய குடும்பங்களுக்கு, மனைவிமாருக்கு வீடுகளைத் தமிழக அரசு சார்பாக வழங்கி வைத்தவர். அன்றைய பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
1985ஆம் ஆண்டு ஜூலை-25 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச் சாலைப் படுகொலையின் சிரார்த்த தினத்தன்று அவர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவர்களுடைய மாடிக் குடியிருப்புக்களுக்குச் சென்று தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பெருமகனாகவும் அவர் விளங்குகிறார்.
அந்தப் பெருமகன் மறைந்து இன்று முப்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும் இன்றும் அவர் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
தமிழகத்தில் ஈழத்தின் இணைப்பு பாலமாக நாம் அனைவரும் தொடர்ந்து போராடி ஈழத்தில் எங்களை நாங்களே ஆளக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே ஒரே வழி என மேலும் தெரிவித்தார்.