நாட்டில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை முற்றாகத் தோற்கடிக்க வேண்டுமானால் துரிதமாக முன்னெடுக்க வேண்டிய ஒரே பணி இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர்.
நல்லிணக்கச் செய்தியை பாடசாலைகளிலிருந்து ஆரம்பித்து வீடுவீடாகச் சென்று உணர்த்தும் பொறுப்பு ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது.
இன நல்லிணக்கமும், மத நல்லிணக்கமும் ஒரு சேர முன்னெடுப்போமானால் இனவாதத்தை முற்று முழுதாக இல்லாதொழிக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கையை நல்லாட்சி அரசு கொண்டிருக்கின்றது.
அதற்கான அடிமட்டத்திலான வேலைத் திட்டத்தை தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயலணி ஆரம்பித்திருக்கின்றது.
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்று நல்லிணக்கச் செய்தியை அனைத்து உள்ளங்களுக்கும் கொண்டு செல்லும் தேசிய வேலைத் திட்டத்தை பள்ளி மாணவர்களூடாக முன்னெடுப்பதன் மூலம் இளம் உள்ளங்கள் தூய்மை பெறுவதோடு நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தலைமைத்துவப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இந்த தலைமைத்துவப் பயிற்சி முகாமை மேற்படி செயலணியே நடத்தியுள்ளது.
இலங்கைக்குள் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் உறுதிமொழிப் பிரமாணத்தில் ஜனாதிபதி தனது முதலாவது கையொப்பத்தை இட்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலணியின் தலைமைப் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலக்கியவாதிகள், எழுத்தாளர்களுடனான ஒரு சந்திப்பின் போது உலக இலக்கியங்கள் எவ்வாறு நல்லிணக்கத்துக்கும், உலக அமைதிக்கும் பங்களிப்புச் செய்திருக்கின்றன என்பதை விளக்கி எமது நாட்டிலும் இனம், மதம், மொழிகளுக்கப்பால் இலக்கியத்தை வளர்த்தெடுக்க முற்படுவோமானால் நல்லிணக்கப் பயணத்தில் சரியான இலக்கை எட்ட முடியும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.
சமூகங்களுக்கிடையே காணப்படும் இனம், மதம், மொழி என்பவை தனித்துப் பயணிப்பதன் மூலம் மக்களது உணர்வுகள் திசைமாறிப் போய் இருண்ட யுகத்தை நோக்கிச் செல்லும் அபாயத்தை அன்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இனத்தால், மதத்தால், மொழியால் மக்கள் பிளவுபட்டுச் செல்ல முற்பட்டதால் நாடுபாரிய பின்னடைவுக்குள் தள்ளப்பட்டதையும் பிரதமர் சுட்டிக் காட்டியிருந்தார்.
உலக இலக்கியங்களை நாம் உள்வாங்கி அதனூடாக எமது கலை கலாசாரப் பண்பாடுகள் சீர்குலையாமல் இயங்கும் பட்சத்தில் அனைத்து இன மக்களும் புரிந்துணர்வுடன் நல்லிணக்கப் பாதையில் முன்னேறிச் செல்லக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறானதொரு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே தேசிய ஒற்றுமை, நல்லிணக்கச் செயலணி பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வை ஆரம்பித்திருக்கின்றது.
இந்தச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி குறுப்பிட்ட மற்றொரு கருத்து சிந்திக்க வைப்பதாகவே உள்ளது.
இந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதிந்து கிடக்கும் நல்லெண்ணம், அன்பு, ஆதரவு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பவற்றில் ஒரு துளியளவு கூட பெரிய மனங்களில் காணப்படவில்லையே.
இதனை எண்ணும் போது பெரும் கவலையாக உள்ளது” என ஜனாதிபதி தனது உள ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இனவாதத் தீ எமக்குள் எவ்வாறு புகுந்து கொண்டது என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டார்.
எமது மக்களுக்கும், மண்ணுக்கும் மிக மிக அவசியமான தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் வேலைத் திட்டத்துக்கு அரசு முன்னுரிமை கொடுத்திருக்கின்றது.
இந்த தேசிய நல்லிணக்க வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்ற போது சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கியர் என இந்த மண்ணில் பிறந்த நாம் எல்லோரும் சவாலுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சவாலை வெற்றி கொள்ள தனித்தனி வழியில் பயணிக்க முடியாது. எல்லோரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். வேறு வேறு திசைகளில் பயணிக்கவும் முடியாது. ஒரே திசையில்தான் பயணிக்க வேண்டும்.
கடந்த கால கசப்பான சம்பவங்களை பாடமாகக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்த ஒன்றிணைந்த பயணத்துக்கு கூட தடைகள் வரலாம்.
இனவாதத்தில் ஊறிப் போன சக்திகள் தீமுட்டலாம். பிஞ்சு உள்ளங்களில் கூட விஷம் கலப்பார்கள். இந்தச் சக்திகள் விடயத்தில் நாம் மிக விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
மீண்டும் இந்த மண்ணில் இரத்தம் பெருக்கெடுக்க இடமளிக்க முடியாது.அரசியல் குரோதங்களுக்காக, ஆட்சிப் பதவிகளைப் பிடிப்பதற்காக மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் விடயத்தில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழ வேண்டும். இனவாதத் தீயை அவர்களுக்கும் விட்டுச் செல்ல முடியாது.
இன்றைய இரவில் நாமெல்லோரும் நித்திரைக்குப் போகு முன் ஒரு நிமிடம் அமர்ந்து மனிதர்களாக இருந்து சிந்திப்போமானால் உண்மை புரியும். யதார்த்தத்தை உணர முடியும்.
நிச்சயமாக நாளைய விடியல் ஒளிமயமானதாக மாறமுடியும். அந்த நல்லெண்ணம் ஒவ்வொருவரது உள்ளத்தில் உதயமாகப் பிரார்த்திப்போமாக.