வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 30ல் தொடங்கி, ஜனவரி 4ல் நிறைவு பெற்றது.
100 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 38 சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு காணப்பட்டது.
இதையடுத்து, அனைத்து இடங்களிலும் வரண்ட வானிலையே நிலவி வந்தது. பல்வேறு இடங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவின் காரணமாக குளிர் காணப்பட்டது.
இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மைய அதிகாரிகள் கூறியது:-தென்மேற்கு வங்கக் கடலில் தாய்லாந்து அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளது.
இதனால், நாளை வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் தெற்கு கரையோரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதனால், இலங்கையின் வடபகுதிக்கு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இன்று புதன்கிழமை வரண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளனர் வானிலை மையத்தினர்.