ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அஞ்சுகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடையாது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சித் தரப்பே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டுமென விரும்புகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென விரும்புகின்றது.
எனினும் சுதந்திரக் கட்சி தோல்வியடையும் என்பதனை நன்கு உணர்ந்து கொண்டுள்ளது. எந்த தரப்பு வெற்றியீட்டினாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பது இந்த நாட்டு மக்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சில உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர் அல்லது செயலாளர் நிர்வாகம் செய்து வருகின்றார். அரசியல் நிர்வாகத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் இவ்வாறு நிர்வாகம் செய்யப்படுவது நியாயமற்றது.
இது தொடர்பில் நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடத்தி மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.