பிரான்ஸ் நாட்டின் பிரதமராக கடந்த 1-4-2014 முதல் 6-12-2016 வரை பதவி வகித்தவர் மேனுவேல் வால்ஸ். சோஷலிச கட்சியை சேர்ந்த இவர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது கட்சியினரிடையே ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், இங்குள்ள பிரிட்டனி பகுதியில் கட்சி அலுவலத்தில் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த மேனுவேல் வால்ஸ் நேற்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். சில முக்கிய பிரமுகர்களும், பாதுகாவலர்களும் அவருடன் வந்தனர்.
முன்னாள் பிரதமரை காண சாலையில் நின்றிருந்த சிலருடன் கை குலுக்கிய மேனுவேல் வால்ஸ் ஒவ்வொருவராக கடந்துவந்தபோது, தனது கரத்தை நீட்டிய ஒரு வாலிபர், ‘நான்தான் பெர்ட்டாங்கே..’ என்று கூறியபடி மேனுவேல் வால்ஸ் கன்னத்தில் பலமாக அறைந்தார்.
திக்குமுக்காடிப்போன மேனுவேல் வால்ஸ், இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்தார். உடனடியாக, அவருடன் வந்த பாதுகாவலர்களில் ஒருவர், முன்னாள் பிரதமரை தாக்கிய வாலிபரின் கழுத்தை பிடித்து, அருகாமையில் உள்ள தடுப்பு வேலியின்மீது தள்ளி, அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தார்.
இந்த செய்தியும், முன்னாள் பிரதமர் தாக்கப்பட்ட வீடியோ காட்சியும் பிரான்ஸ் நாட்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.