மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவில் (சி.சி.ஐ.) உயர் பதவிக்கான கவுரவ உறுப்பினர் பட்டியலில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இணைந்தார். இதற்கான விழாவில் அவருடன் ஏற்கனவே உறுப்பினராக இருந்த கவாஸ்கரும் பங்கேற்றார்.
இந்த விழாவில் கபில்தேவ் கூறியதாவது,
இந்திய கிரிக்கெட்டின் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்தவர் கவாஸ்கர் ஆவார். அவரை போன்ற சிறந்தவர் யாரும் இல்லை. கிரிக்கெட்டில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் அறிந்தவர். அவரை தான் அனைவரும் பின்பற்றுகின்றனர். கிரிக்கெட்டின் இலக்கணமாக கவாஸ்கர் திகழ்கிறார்.
எந்தவித இலக்கணமும் தெரியாமல் கிரிக்கெட் விளையாடியவன் நான். சிறிய நகரத்தில் இருந்து நான் வந்தவன். மும்பை வீரர்கள் மற்றும் மீடியாவின் தாக்கத்தால் நான் இதில் நுழைந்தேன்.
சி.சி.ஐ.யில் ‘ஹால் ஆப்பேம்’ உறுப்பினராக தேர்ந்து எடுத்து பாராட்டியது எனக்கு கிடைத்த கவுரமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கபில்தேவ் 1983-ம் ஆண்டு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் சர்வதேச வீரர் கவாஸ்கர் ஆவார்.
கபில்தேவும், கவாஸ்கரும் விளையாடிய காலக் கட்டத்தில் கருத்து வேறுபாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.