ராணுவ வீரர்களுக்கு நவீன ஹெல்மெட்!

இந்தியாவில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பாரா மிலிட்டரி படையினர், இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் என ராணுவத்தில் முக்கிய படைப்பிரிவினர் எதிரி நாடுகளின் தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் பழைய தொழில்நுட்பங்களை கொண்டிருப்பதால், நவீன வசதிகளை உள்ளடக்கிய கருவிகள், புல்லட் ஃப்ரூப் உடைகள், ஹெல்மெட் ஆகியவை வழங்கவேண்டும் என அவர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில், தற்போது 1.58 லட்சம் நவீன ஹெல்மெட்களை தயாரிப்பதற்கு கான்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 170 கோடி ரூபாய் ஆகும்.
நவீன ஹெல்மெட்கள் மூன்று ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த வகை ஹெல்மெட்கள் 9.மி.மீ அளவுடைய துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு அருகிலிருந்து தாக்கினாலும், தாங்கும் வலிமை படைத்தது. மேலும், தகவல் தொடர்பு சாதனங்களை உள்ளடக்கிய வசதிகளை ஹெல்மெட் கொண்டிருக்கும்.
நவீன வசதிகள் கொண்ட உபகரணங்கள் வழங்கப்படுவதால் ராணுவத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.