முதன்மை தலம் :
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில். 108 வைணவத் தலங்களில் முதன்மையான தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயத்தை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெரியகோவில் என்றும் அழைக்கிறார்கள். வைணவத்தைப் போற்றி வளர்த்த 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட ஒரே தலம் இது மட்டுமே என்பது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. ஸ்ரீரங்கம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர். உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே, இத்தலத்துக்கு நேரில் வந்து இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சுக்ர பகவான் தலம் :
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ர பரிகார தலமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் மூலவர் ‘ரங்கநாதர்’ மற்றும் ‘பெரிய பெருமாள்’ என்ற திருநாமங்களைக் கொண்டு அழைக்கப்படுகிறார். உற்சவமூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும், ‘அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார். வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப் பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள்பாலிக்கிறார் மூலவர் ரங்கநாதர்.
7 லோகங்கள் :
ரங்கநாதரைச் சுற்றி 7 பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு பிரகாரங்களும், ஏழு லோகங்களாக கருதப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆலயம் என்று இருந்தால், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால் வீதிகளே பிரகாரங்களாக கொண்ட நகரை தனக்குள் கொண்டிருப்பது ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயம். இவற்றில் 7-வது பிரகாரம் ‘மாட மாளிகை பிரதட்சணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரகாரத்தின் தெற்கு வாசலாக இருந்த மொட்டை கோபுரம், அகோபில மடம் 44-வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடியாகும்.
எட்டு தீர்த்தங்கள் :
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் முக்கிய தீர்த்தமாக விளங்குவது சந்திர புஷ்கரணி தீர்த்தம். இந்த தீர்த்தத்தைச் சுற்றி, அதன் அங்கமாக தெற்கே அசுவ தீர்த்தம், தென் கிழக்கில் ஐம்பு தீர்த்தம், கிழக்கே பில்வ தீர்த்தம், வடமேற்கே வகுள தீர்த்தம், வடக்கே கதம்ப தீர்த்தம், வடகிழக்கில் ஆம்பர தீர்த்தம், மேற்கே புன்னாக தீர்த்தம், தென்மேற்கே பலாச தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாக சந்திர புஷ்கரணி தீர்த்தம் இருக்கிறது. எனவே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், நவதீர்த்த தலமாக கருதப்படுகிறது.