இல்லற வாழ்வு சிறக்க அர்த்தநாரீசுவரர் வழிபாடு!

அம்பிகைக்கு இறைவன் தனது உடலில் இடப்பாகத்தை அளித்து மாதொரு பாகனாக நின்ற நாள் கார்த்திகைத் திருநாளாகும். அந்த நாளின் இனிய மாலைவேளையில் சிவசக்தியர் இருவரும் ஓருடலாக நின்று களி நடனம் புரிய, அன்பர்கள் அதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாளில் மாலையில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் அவ்வேளையில், ஆலயத்துள் மலையை நோக்கியவாறு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீபாராதனை செய்யப்படுகின்றது. அதேநேரத்தில், ஆலயத்துள்ளிருந்து அர்த்தநாரீசுவரர் வெளிவந்து கொடிமரத்தின் முன்பாகத் திருநடனம் புரிகின்றார். தீப்பந்தங்களின் நடுவில் நின்று ஆடும் அவரது நடனம் சில மணித்துளிகளே நிகழ்கிறது என்றாலும், கண்ணுக்கும் மனதுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும் சொல்லொணா நிம்மதியையும் அளிக்கின்றது.

அர்த்தநாரீசுவர திருக்கோலத்தை மாணிக்கவாசகர் தொன்மைக் கோலம் என்று போற்றுகின்றார்.

தோலும் துகிலும் குழையும்சுருள்தோடும்
பால்வெண்ணீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வலியும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

– என்பது அவர் அருளிய திருவாசகப் பாடலாகும்.

வலப்பக்கத்தில் தோலாடையும் இடப்பாகத்தில் பட்டாடையும் உடுத்தி, வலக்காதில் குழையும், இடது காதில் தோடும் அணிந்து, வலப் பகுதியில் வெண்ணீறு பூசி, இடது பாகத்தில் பசும் சாந்தாகிய மஞ்சள் பூசி பைங்கிளி ஏந்தியும், வலதுகையில் சூலமும் ஏந்தி மிகுந்த வலிமை கொண்ட சிவபெருமானின் கோலம் காலம் கடந்த தொன்மையானது என்பது இதன் பொருள். அர்த்தநாரீசுவர வடிவம் இறைவியின் விருப்பால் எழுந்தது. அர்த்தநாரீசுவர வடிவத்தைத் தொழுவதால் இல்லற வாழ்வும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.