தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக மெரினா கடற்கரையில் போராடி வருகின்றனர். இருட்டத் தொடங்கி விட்டதால் தற்போது செல்போன் ஒளியில் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் போராடி வருகின்றனர். இதேபோல இளைஞர்கள் பலரும் தமிழ்நாடு முழுவதும் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எனினும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து போராடுவோம் என மெரினாவில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.