ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. இளைஞர்களின் இந்த போராட்டத்துக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிக, நடிகையர் உள்ளிட்ட பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி மெரினா கடற்கரையில் இளைஞர் ஒருவர் கழுத்தளவு மணலில் புதைந்து போராட்டம் நடத்தினார். அவரின் கையில் உள்ள பதாகையில் ”நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பாதுகாப்போம். பீட்டா அமைப்பினை தடை செய்வோம்” என எழுதப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசுவதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.