ஜல்லிக்கட்டை தடை செய்தது யார் தெரியுமா? பீட்டா இந்திய தலைவரின் புது விளக்கம்!

ஜல்லிக்கட்டை நாங்கள் தடை செய்யவில்லை, இந்திய சட்டம் தான் தடை செய்தது என பீட்டா அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடைபெற்று வரும் வரலாறு காணாத போராட்டங்களில், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டை நாங்கள் தடை செய்யவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என அந்த அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார்.

பீட்டா அமைப்பிற்கு கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமைப்புகளில் நாங்களும் ஒருவர். இந்திய விலங்குகள் நல வாரியம் உட்பட பல அமைப்புகள் எங்களுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. ஆனால் பீட்டா மட்டுமே தற்போது குறி வைத்து எதிர்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டை பீட்டா தடை செய்யவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நலம் உறுதி செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பது மட்டுமே பீட்டாவின் வேலை என பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் வறட்சி ஏற்பட்ட போதும், 144 தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும், இந்த போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டு மாட்டினங்களை காப்பாற்ற, ஜல்லிக்கட்டை தவிர்த்து பல்வேறு வழிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.