ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கைவிடுக்க உள்ளார். இதையடுத்து இன்று இரவே அவர் டெல்லி கிளம்ப உள்ளார். முன்னதாக போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் இதை ஏற்று போராட்டத்தை கைவிட மாட்டோம் என அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் இணைந்து அறிவித்துள்ளனர்.
வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். பிரதமரே கூறினாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டத்தை கைவிட்டால் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்காது என்று அவர்கள் கூறிவிட்டனர். எனவே இன்று இரவும், அலங்காநல்லூர் மக்களோடு, வெளியூர்களில் இருந்து வந்துள்ள இளைஞர்களும், போராட்டத்தை தொடரப்போவது உறுதியாகியுள்ளது