உச்சநீதிமன்ற உத்தரவினால் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று நம்பிக்கையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது என்று தை பொங்கலுக்கு முதல்நாள் கூறிவிட்டது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கொஞ்சம், நஞ்சமிருந்த நம்பிக்கையும் உடைந்து போகவே இளைஞர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இதனிடையே சென்னை மெரீனாவில் கடந்த 48 மணிநேரமாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் வாக்குறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். அதில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இளைஞர்கள் அதனை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
முதல்வர் பேச்சுவார்த்தை
போராட்டக்குழுவினர்கள் சிலரை அழைத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வரின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த இளைஞர்கள் குழுவினர் அவரது இல்லம் சென்றனர். முதல்வர் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது போராட்டக்குழுவினர் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பிரதமரை சந்திக்க டெல்லிக்கு கிளம்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் பாரம்பரிய உணர்வுகளை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன் என்று தெரிவித்தார்.
பிரதமரிடம் பேசுவேன்
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்போது பிரதமரை வலியுறுத்துவேன் என்றார். போராட்டக்குழுவினர் சிலர் நேரில் சந்தித்து பேசினார்கள். நான் கூறியதை கேட்டு திருப்தியுடன் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். தமிழகத்துக்கு தேவையான வறட்சி நிவாரணத் தொகையை பிரதமரிடம் கேட்க உள்ளேன். அப்போது ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைப் பற்றியும் எடுத்துக்கூறுவேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சுமூக உறவு
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமூக உறவு இருக்க வேண்டும் என்பதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கருத்து என்று தெரிவித்தார். மத்திய அரசிடம் போராடியும், வாதாடியும் உரிமைகளை பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.