மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போன்றே எம்.ஜி.ஆரை மேற்கோள் காண்பித்து பிரஸ் மீட் செய்தார் அவரது அண்ணன் மகள் தீபா.
சென்னை, தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா. முன்னதாக அவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
தீபா அரசியலில் குதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஏராளமான பத்திரிகையாளர்கள் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். ஆனால் தீபாவோ, நான் முதல் முதலாக உரையாற்றப்போகிறேன் என கூறியபடி மைக்கை பிடித்து பத்திரிகையாளர்களுக்கு ‘ஜெர்க்’ ஏற்படுத்தினார்.
இதையடுத்து மேடையில் உரையாற்றுவதை போன்ற தோரணையுடன்தான் பேச்சை ஆரம்பித்தார்.
பேச்சின்போது, ஜெயலலிதாவை போன்றே சில இடங்களில் அழுத்தமாக சத்தமாக பேசினார். பிற இடங்களில் சாதாரணமாக பேசினார். குறிப்புகளை ஒரு காகிதத்தில் எழுதி அதை பார்த்துவாசித்தார்.
நிருபர்களின் ஆங்கில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பதிலளித்தார் தீபா. அப்போது அவரது உச்சரிப்பு ஸ்டைல் பக்காவாக ஜெயலலிதாவை போன்றே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.