அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ். 92 வயதான இவர் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே இவர்தான் வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த புஷ், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை பாதிப்படைந்ததால் ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புஷ்ஷின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும், சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக உதவியாளர் தெரிவித்துள்ளார்.