ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் போராடும் தமிழர்கள்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் தமிழர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு அளிக்கும்படி உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களை கேட்டுக் கொண்டதால் இந்த போராட்டம் தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ் சங்கங்கள் அங்குள்ள மக்களிடம் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடந்தன.

அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க், ஜார்ஜியா, வாஷிங்டன், நியூஜெர்சி, மிச்சிகன், மினசோட்டா, ஓகியோ, நெப்ராஸ்கா, டெக்சாஸ், கலிபோர்னியா, கனெக்டிகட், மேரிலாண்ட் ஆகிய மாகாணங்களில் மாலை நேரத்தில் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் உரக்க எழுப்பினர்.

‘ஜல்லிக்கட்டை காப்போம்’, ‘எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்ற பதாகைகளையும் அவர்கள் ஏந்தி இருந்தனர். பீட்டா அமைப்பை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

தற்போது அமெரிக்காவின் பல மாகாணங்களில் குளிர் கடுமையாக இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சாலை ஓரங்களில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்லாண்டா, டல்லாஸ், டெட்ராய்ட், கொலம்பஸ், சியாட்டில், தெற்கு ஆஸ்டின், சான் அண்டோனியோ, பால்டிமோர், மின்னியாபொலிஸ், சான்பிரான்சிஸ்கோ உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் 250 முதல் 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

இவர்களில் பலர் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி அணிந்தும் வந்திருந்தனர். டல்லாஸ் நகர தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அட்லாண்டா நகரில் தமிழர்கள் குடும்பமாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இந்திய தூதரக அதிகாரி நாகேஷ் சிங்கை சந்தித்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மனுவும் கொடுத்தனர்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், அயர்லாந்தின் டப்ளின், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கையின் யாழ்ப்பாணம் நகரங்களிலும் ஏராளமான தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் முன்பாக நேற்று மாலை திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

முக்கிய நாடுகள் பலவற்றில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இப்பிரச்சினை தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.