கேரள முதல்வரின் எளிமையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது: நடிகர் சூர்யா பேட்டி!

நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 சினிமா வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் கேரளாவில் அதிக தியேட்டர்களில் தமிழிலேயே திரையிடப்படுகிறது.

இதையொட்டி நடிகர் சூர்யா, அந்த படத்தின் டைரக் டர் ஹரி ஆகியோர் கேரளா சென்று சிங்கம்-3 படத்தை பற்றி அறிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். கொச்சியில் இருந்து நடிகர் சூர்யா விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு சென்றார். அதே விமானத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் பயணம் செய்தார்.

அவர் சாதாரண வகுப்பில் பயணம் செய்ததை பார்த்து அவரது எளிமையை வியந்த நடிகர் சூர்யா அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பினராய் விஜயனும் சிரித்துக் கொண்டே சூரியாவுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுபற்றி திருவனந்த புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சூர்யா கூறியதாவது:-

திருவனந்தபுரத்திற்கு நான் விமானத்தில் வந்த போது கேரள முதல்-மந்திரி பினராய்விஜயனை சந்தித்தது என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. அவர் மிக எளிமையாக, சாதாரண வகுப்பில் பயணம் செய்ததையும், மற்ற பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கும் வரை காத்திருந்து கடைசியாக இறங்கியதையும் என்னால் நம்ப முடியவில்லை. கேரள முதல்வரின் இந்த எளிமையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பினராய் விஜயனும், எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றாக வந்து சென்றதும் கேரள மக்களின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்து வதாக இருந்தது.

கேரளாவில் தமிழ் படங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல் வெளியிடப்படுகிறது. கேரள ரசிகர்களும் அதை ரசித்து பார்க்கிறார்கள்.
தமிழ் படங்களுக்கு கேரள மக்கள் கொடுக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் வரவேற்பு என்னை நெகிழச் செய்தது.

தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வில் ஒரு மாணவர் காப்பி அடித்தார் என்பதற்காக தேர்வு முறையையே ரத்து செய்வது போல இது உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் எழுச்சி மிக்கதாக உள்ளது. அவர்கள் தாமாகவே வந்து போராட்டம் நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த போராட்டத்தில் உண்மை உள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தற்போது எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியே பேசப்படும் அளவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சூர்யாவை பார்ப்பதற்காக ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதைப்போல சூர்யா தங்கி இருந்த ஓட்டல் முன்பும் ரசிகர்கள் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

ஓட்டலின் நுழைவுவாயில் கண்ணாடிகளும் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக உடைந்து விழுந்தது. இதனால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினார்கள்.