வெற்றிலை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. காரமும், மணமும் கொண்ட இதற்கு மெல்லிலை என்ற பெயர் உண்டு. வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றும்.
சளியை கரைக்க கூடிய தன்மை கொண்டது. வலி, வீக்கத்தை போக்கும். உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும். பால் பெருக்கியாக பயன்படுகிறது. உமிழ்நீரை சுரக்க வைக்க கூடியதாக வெற்றிலை இருக்கிறது. செரிமான கோளறுகளை போக்கும். உள் உறுப்புகளை சீராக செயல்படுத்துகிறது. இருமல், சளியை போக்க கூடியது.
வெற்றிலையை பயன்படுத்தி செரியாமை, நெஞ்சக கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 வெற்றிலையை துண்டுகளாக்கி, அதனுடன் சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்தால் பசியின்மை சரியாகும். வயிற்று கோளாறுகள் குணமாகும்.
வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வெற்றிலையுடன் பாக்கு போடும்போது, பாக்கில் இருக்கும் பூச்சிகள் நம்மை தாக்காத வண்ணம் தடுக்கிறது.
வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. வெற்றிலையை இரவில் சாப்பிடுவதால் சீரண கோளாறுகள் சரியாகிறது. உடலுக்கு பலம் தரக்கூடிய வெற்றிலை, உள்ளத்துக்கு இதமான சூழலை உருவாக்குகிற்து. வெற்றிலையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பாதுகாக்கும் மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: வெற்றிலை, துளசி, ஏலக்காய், லவங்கம், தேன். ஒரு வேளைக்கான தேனீர் தயாரிக்க ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், ஒரு லவங்கம் மற்றும் ஒரு ஏலக்காய் ஆகியவற்றை இடித்து சேர்க்கவும். மேலும், 5 துளசி இலைகளை சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிக்கட்டி தேன் சேர்க்கவும். இதை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வயிற்று வலி சரியாகும்.
விட்டுவிட்டு வரும் காய்ச்சலை போக்கும். குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு ஏற்படாது. நல்ல பசியை தூண்டும். சளி, காய்ச்சல் தொல்லை இருக்காது.
வெற்றிலையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சக சளி, தலைவலி, பெண்களுக்கு ஏற்படும் பால்கட்டு பிரச்னைக்கான மேல்பத்து தயாரிக்கலாம்.ஒரு தட்டில் சிறிது நல்லெண்ணெயை தடவவும், இதில் வெற்றிலையை அடுக்கி வைக்கவும். வெற்றிலையை வாட்டிய பின் வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் வைத்தால் சரியாகும். தலைவலிக்கு ஒத்தடமும் கொடுக்கலாம்.
மிதமான சூட்டில் எடுத்து குழந்தைகளுக்கு மார்பு மேல் பத்தாக வைத்தால் சளி கரையும். பெண்களுக்கு பால்கட்டுவதால் ஏற்படும் வலியை குணப்படுத்தும்.
வெற்றிலை காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது. வலியை தணிக்க கூடியது. வீக்கத்தை கரைக்கவல்லது. எச்சிலை சுரக்க வைக்கும் தன்மை உடையது. வெற்றிலை சாறு ஓரிரு துளிகள் எடுத்து மூக்கில் உறிஞ்சும்போது தலைபாரம், சளி கரையும். காதில் விடுவதால் காதுவலி காணாமல் போகிறது.