தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வலுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள அசாதாரண சூழ்நிலையை விளக்கிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு உள்ளதை காரணம் காட்டிய பிரதமர் மோடி, தற்போது எதுவும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார். அதேசமயம், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாக கூறியிருக்கிறார்.
பிரதமர் கைவிரித்துவிட்டதால் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் தங்களது போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதேசமயம், அரசியல் தலைவர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி வரும் 26ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் கூறினார்.
அதன்பின்னர் பிரதமரை நேரில் சந்திக்க முடிவு செய்த அவர் பிரதமரின் இல்லத்திற்கு சென்றார். அங்கு பிரதமரின் வீட்டுக்கு வெளியே திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி அவர் இப்போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.