ஜல்லிக்கட்டு: தமிழக அரசின் செயலை விரைவில் காண்பீர்கள்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான முடிவு விரைந்து எடுக்கப்படும் என டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்திருக்கிறார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் ” ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவர பிரதமரிடம் வலியுறுத்தினேன்.தமிழகத்தின் வறட்சி குறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்திட சட்டத்திருத்தத்தை கொண்டுவருமாறு வலியுறுத்தினேன்

இந்த பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. ஆனால் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று பிரதமர் கூறினார்

மேலும், ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசின் செயலை விரைவில் காண்பீர்கள் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.